நாமக்கல் மாவட்ட அளவில் மகளிருக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நவ.14-ல் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறும் என நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்பியுமான ஏ.கே.பி.சின்ராஜ், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தடகள சம்மேளம் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து மத்திய அரசின் ஆதரவுடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திறமையான பெண் தடகள வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச அளவிலும், ஒலிம்பிக் அளவிலும் பங்கேற்க செய்து வெற்றி பெறுவதற்கான அனைத்து விதமான உதவிகள் அளிக்கப்படுகிறது. இதன்படி அஸ்மிதா என்ற பெயரில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட பெண் வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 300 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று. நாமக்கல் மாவட்டம் அளவிலான இந்த தடகளப் போட்டிகள் வரும் நவம்பர் 14ஆம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
வயது வரம்பு: 14 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவினர் 21.12.2011 முதல் 20.12.2013 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் 21.12.2009 முதல் 20.12.2011 தேதிக்குள்ளாக பிறந்திருக்க வேண்டும்.
14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டிரையத்லான் பிரிவு எ,பி,சி மற்றும் கிட்ஸ் ஜவலின் என நான்கு போட்டிகளும்,16 வயதுக்கு உட்பட்ட பெண் சிறுமிகளுக்கு 60மீ, 600மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் , குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் என ஏழு போட்டிகள் நடைபெறுகின்றது. போட்டி சம்பந்தமான விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் இணைச்செயலாளர் கார்த்தி அலைபேசி எண் : 9444879213, 8610123646 தொடர்பு கொள்ளலாம்.





