நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் பட்டா கத்தியுடன் மதுபோதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் 5 பேர் , வழியில் கண்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய படி சென்ற சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் நகரில் புதிய பஸ் நிலையம் பகுதியில் பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகளை அச்சுறுத்தும் வகையில் 5 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் போதைப் பொருட்கள் பயன்படுத்தியிருந்ததாலும், கையில் பட்டா கத்தியுடன் சுற்றி வந்ததாலும் பொதுமக்கள் யாரும் இவர்களை தட்டிக்கேட்க முன்வரவில்லை. வழியில் காண்போரையெல்லாம் தாக்கிய இந்த இளைஞர்கள் அப்பகுதியில் இருந்து பெண்களையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் பேருந்து நிலையத்தில் இருந்த இளைஞர்கள் பலர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மேலும், மது போதையில் இருந்து இளைஞர்கள் டிவிஎஸ் சாலை வழியாக பட்டணம் சாலைக்கு சென்று அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பாக தகராறில் ஈடுபட்டனர். அவ்வழியே சென்ற கார் மீது தாக்கினர். பின்னர் அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையின் பாரிகேட் இரும்பு தடுப்பு பலகையை கீழே சாய்த்து சேதப்படுத்தினர். மேலும் அங்குள்ள கடைகளில் இருந்து வியாபாரிகளை தாக்கி தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து அப்பகுதியினர் சிலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, போலீஸார் சம்பவ இடம் சென்று அங்கிருந்த இளைஞர்கள் மூவரை துரத்தி பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதையில் இருந்த இளைஞர்கள் ராசிபுரம் அச்சுக்கட்டித்தெரு சிராஜூதீன் மகன் ரியாஸ்தீன் (21), அவரது தம்பி, அஜ்புதீன் (20), வி.நகர் பகுதியை சேர்ந்த ராஜ்பாய் மகன் பாபு (26) என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூவர் மீதும் சென்னை, ராசிபுரம் உள்ளிட்ட காவல் நிலையப் பகுதியில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதனையடுத்து, ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார், காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கே.சுகவனம், உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி இவர் மீது வழக்கு பதிவு செய்து மூவரையும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய ராசிபுரம் பகுதியை சேர்ந்த பூபாலன், சுஜித் ஆகிய மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். மதுபோதை இளைஞர்களின் சம்பவம் ராசிபுரம் நகரில் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.





