ராசிபுரம் நகரில் குற்ற நடவடிக்கைகள் நடைபெறுவதையும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் ராசிபுரம் காவல் நிலையத்தில் நிரந்தர காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட வேண்டும் என ஆய்வுக்கு ராசிபுரம் வந்திருந்த கோவை மண்டல காவல்துறைத் தலைவர் டி.செந்தில்குமாரிடம் பல்வேறு கட்சியினர் பலர் மனு அளித்தனர்.

கோவை மண்டல காவல்துறைத் தலைவர் டி.செந்தில்குமார் ஆய்வுக்காக ராசிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்திருந்தார். இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட கம்யூனிஸ்டு கட்சியின் செயலர் எஸ்.கந்தசாமி, பாஜக வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் வா.குமார் ஆகியோர் மண்டல காவல் ஐஜி., டி.செந்தில்குமாரை நேரில் சந்தித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் கடந்த ஒராண்டாக காவல் ஆய்வாளர்கள் இல்லை. இதனால் நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிக அளவில் ஏற்படுகிறது. மேலும் குற்ற நடவடிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை. சில தினங்களுக்கு முன் கூட ராசிபுரம் நகரில் போதை இளைஞர்கள் சிலர் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாக் கத்தியுடன் சுற்றி வந்துள்ளனர். மேலும் எதிரில் வந்த பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்திட காவல்துறை ரோந்துப்பணியை அதிகப்படுத்துவதுடன், நகர காவல் நிலையத்திக்கு நிரந்தர காவல் ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு அளித்தனர். இதே போல் நகரில் காவலர்கள் பற்றாக்குறையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பிரவுகளிலும் காவல் துறையினர் கூடுதலாக நியமித்து குற்ற சம்பவங்களை தடுத்து பொதுமக்கள், மாணவ மாணவியர், பெண்கள் வியாபாரிகள் அச்சமின்றி நடமாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.





