Tuesday, October 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைதேர்தல் நடைமுறை ஊழல்களை ஆய்வுகள் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் - தமிழ்நாடு...

தேர்தல் நடைமுறை ஊழல்களை ஆய்வுகள் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்

தேர்தல் நடைமுறைகளின் போது நடைபெறும் ஊழல்களை ஆய்வுகள் மூலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அறியாமை, ஊழல், சர்வாதிகாரம் ஆகியன மக்களாட்சிக்கு எதிரான சக்திகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமக்கல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்களின் சார்பில் வரவேற்பு விழாவும் கல்லூரி முதல்வர் அருண் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் ,தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினருமான டாக்டர் வீ. ராமராஜ் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் அவர் மேலும் பேசியதாவது.

சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினையை தூண்டும் எண்ணங்களும் வெறுப்பு பேச்சுகளும் மாணவர்களுடைய இருக்கக் கூடாது. இவற்றை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே சமூக ஒற்றுமையும் தேசத்தின் வளர்ச்சியும் ஏற்படும். சுய முன்னேற்றமும் சமுதாய முன்னேற்றமும் இரண்டு கண்கள் என்பதை அனைத்து மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும். சமுதாய முன்னேற்றம், சமூக நீதி போன்றவற்றின் மூலமே தேசத்தின் வளர்ச்சியை எட்ட முடியும். தேசம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தனி மனிதர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் மூன்று சம பரிமாணங்களாகும். இந்த பரிமாண மதிப்புகள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை போன்ற ஜனநாயக அமைப்புகளின் தரத்தை தீர்மானிக்கின்றன. வாக்காளர்களின் அறியாமை, ஊழல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் பரிணாமங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளாகும்.

கால மாற்றத்துக்கு ஏற்றவாறு புதிய கல்வி பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும்

வாக்கு, வாக்காளர் மற்றும் தேர்தல்கள் குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் கல்வியாகும். வாக்காளரியல் கல்வியானது இன்னும் அரசியல் அறிவியல் பட்டப் படிப்புகளில் வாக்காளர்கள் குறித்த படிப்பு மற்றும் தேர்தல் நிர்வாகம் போன்ற துணைப் பகுதியாக இருந்து வருகிறது. அரசியல் அறிவியல் கல்வியும் வாக்காளரியல் கல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றாலும் உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு போதிக்கப்படுகிறது ஆனால், ஒரு சதவீதத்துக்கு கீழான பல்கலைக்கழகங்களில் மட்டுமே மக்களாட்சி மற்றும் தேர்தல் நிர்வாகம் போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன என்றார்.

சட்டமே மேலானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சட்டப்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய சட்டத்தை உருவாக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை மக்களிடம் உள்ள உச்ச அதிகாரமாகும். இந்தியாவில் உள்ள தேர்தல் ஆணையம் போன்று பல்வேறு நாடுகளில் உள்ள தேர்தல் நடத்தும் அமைப்புகள் குறித்த ஒப்பீடுகள் மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்கள் குறித்த ஆய்வுகள் போதுமான அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. மக்களாட்சி மற்றும் தேர்தல் முறைகள் குறித்த ஆய்வுகளை சட்டக் கல்லூரி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேர்தல் நடைமுறைகளில் ஏற்படும் தவறுகள் மற்றும் ஊழலை கண்டறிந்து தடுக்க முடியும் என்றும் அவர் டாக்டர் வீ. ராமராஜ் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் கொள்கையையும் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எத்தகைய செயல்திட்டத்தை வழங்க உள்ளது என்பதையும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். கொள்கைகளையும் செயல் திட்டத்தையும் அரசியல் கட்சிகள் அவர்களது இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் கொள்கையோ செயல்திட்டமோ இல்லாத தனி மனிதர்கள் மீதான போதையில் இருந்து மாணவர்களையும் இளைஞர்களையும் காப்பாற்ற இயலும் என்று அவர் தெரிவித்தார்.

கலை நிகழ்ச்சி

விழாவில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் கல்லூரி சார்பில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று கோப்பை வென்ற அணியினர் பாராட்டப்பட்டனர். பின்னர் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றனர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர்களும், சட்ட மாணவர்களும் பங்கேற்றனர். உதவி பேராசிரியர்கள் பிரியா சுமதி சுவர்ணலட்சுமி மற்றும் உடல் கல்வி இயக்குனர் ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!