நாட்டிலேயே அதிக கடன் பெற்றுள்ள மாநிலம் தமிழகம் தான். கடன் பெற்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுத்துவருகிறது என்பதால் விரையில் தமிழகம் பொருளாதார சிக்கலை சந்திக்கும் என பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் ராசிபுரத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாரதிய ஜன சங்கத் தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீன் தயாள் உபாத்தியாயா வின் 109-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில், பாஜக சார்பில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி.ராமலிங்கம் தீனதயாள் உபாத்தியாயா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உபாத்யாயாவின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து டாக்டர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியது:
திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்திருப்பதாக கூறிவருகிறார். இது முற்றிலும் பொய் என மத்திய தணிக்கை குழு ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் 2013-14 முதல் 2022-23 நிதி ஆண்டுகளின் இடைப்பட்ட 10 ஆண்டுகளில், ஒவ்வொரு மாநிலமும் எப்படி உயர்ந்துள்ளது. வளர்ச்சி பணிகள் என்ன நடந்துள்ளது. எவ்வளவு வருவாய் உபரி ஈட்டியது, பொருளாதார உயர்வு என்ன , நலத்திட்டங்கள் செயல்பாடு உள்ளிட்டவை குறித்தான சிஏஜி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் உத்தரபிரதேச மாநிலம்தான் 37 ஆயிரம் கோடி ரூபாய் உபரி வருவாய் ஈட்டி முதன்மை மாநிலமாக உள்ளது. ஆனால் தமிழகம், 27-வது இடத்திற்கு தள்ளப்பட்டு பெரும் கடன் சுமையில் உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. திமுக அரசு, கடன் பெற்று அதனை பயன்படுத்தி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுக்கும் நிலையில் உள்ளது. மக்கள் மீது கடன் சுமையை சுமத்தி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. இந்த நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகம் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது சிஏஜி அறிக்கை மூலம் தெரிகிறது.
2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, தமிழகத்தை அப்படியே கடனில் தள்ளி விட்டு சென்றுவிடலாம் என திமுக நினைத்தாலும், பொதுமக்கள் மீது கடன் சுமத்தப்பட்டுள்ளதால், திமுக 166 பேரின் குடும்ப முதலீடுகள் எவ்வளவு? என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் சொத்து விவரம் குறித்தும் மக்கள் கேள்வி கேட்பார்கள். எனவே, இதனை உணர்ந்து ஆட்சியாளர்கள் இதனை சரிப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
பொதுமக்கள் நல்வாழ்வு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பிரதமர் ரேந்திர மோடி, ஜிஎஸ்டி வரியில் சீரமைப்பு செய்துள்ளார். 2 கட்டங்களாக எளிமைப்படுத்தி, இந்திய வரலாற்றில் பொருளாதாரப் புரட்சியை நடத்திக் காட்டி உள்ளார். மேலும், பிரதமர், 2047-ல் வளர்ச்சி அடைந்த , சக்தி வாய்ந்த நாடாக உருவாக்குவதன் ஒரு பகுதியாகத்தான் நாட்டு மக்களை சுயசார்பு முறையில் முன்னேற்றி வருகிறார். அமெரிக்கா நமது ஏற்றுமதி பொருள்களுக்கு அதிக வரியை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்து பொருட்களை சுதேசியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் அதிக கவனம் செலுத்தி, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார். அமெரிக்க வரிவிதிப்புக்கு உலக நாடுகள் மாற்று வழி கண்டுபிடிக்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சாதுரியமான முடிவுகளை எடுத்து, சரக்கு-சேவை வரியை சீரமைத்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இந்திய மக்கள் பயனடைந்து வரும் நிலையில், அதனுடைய பயன் நேரடியாக மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழ்நாடு அரசு, பால், பால் பொருட்களின் விலையை இதுவரை குறைக்காமல் உள்ளது. மத்திய அரசு, சரக்கு-சேவை வரியை குறைத்த போதிலும், திமுக அரசு அதனை குறைக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? இதிலேயும் திமுக அரசியல் ஆதாயம் தேடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜிஎஸ்டி புதிய வரி சீரமைப்பின்படி அதற்கான விலையில் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பிரச்சாரத்தில் பாஜகவை தமது கொள்கை எதிரி என கூறும் விஜய், திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறாரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. பாஜகவின் கொள்கைகளை முதலில் விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். தேசம் காப்போம் தமிழகம் வெல்வோம் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தேசத்தில் இருக்கும் வெளிநாட்டு எதிரிகளை தக்க முறையில் தடுத்து நிறுத்தி, தீவிரவாத செயல்கள் தேசத்தை பாதிக்காத வகையில் நாட்டை வலிமை படுத்துவருகிறார் பிரதமர்.
பாஜக, தமிழகத்தில் மேலும் அதிக உத்வேகத்தோடு செயல்பட்டு வருகிறது. தற்போது வாக்காளர் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், இதனை கண்டு ஏன் திமுக உள்ளிட்டோர் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை என்றார்.
முன்னதாக நடைபெற்ற உபாத்யாயா பிறந்த தினவிழாவில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் வி.சேதுராமன், வழக்குரைஞர் ஆர்.டி.இளங்கோ, நகர தலைவர் பி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.