நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அருள்மிகு பண்ணையம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டு நிறைவு விழாவை தொடர்ந்து திருத்தேரோட்டம் , பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு நிறைவு விழா, திருத்தேர் வடம் பிடித்தல், பொங்கல் விழா ஆகியன கிராம சாந்தி, கொடியேற்றத்துடன் செப்.5-ல் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து செப். 8, 9 ஆகிய நாட்களில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை பொங்கல் வைத்தல் நிகழ்வு, திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல், மாவிளக்கு பூஜை ,சத்தாபரணம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தி, திருத்தேரை வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர்.

மேலும் பெண்களின் பரதம், நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் தெய்வீக இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றன. விழாவை தொடர்ந்து செப்டம்பர் 12-ல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏழூர் நாடு பண்ணைகுல கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.