நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு தூய்மை பணிக்கான மத்திய அரசின் ஸ்வட்ச் சர்வேக்சான் விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார செயல்பாட்டிற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுகாதாரத்தில் சிறந்த விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

தூய்மை கணக்கெடுப்பில் 2024-ம் ஆண்டுக்கான விருதுகள் தேசிய அளவில் அனைத்து மாநிலங்கள் வாரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி மூன்று நட்சத்திர தகுதியுடன் கூடிய மாநில அளவில் 2-ம் இடம் பெற்று விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் ராசிபுரம் நகராட்சி 89-ம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நகரில் வீடுகள் தோறும் சென்று குப்பை பிரித்து பெறுதல், மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டு குப்பைகளை அப்புறப்படுத்தும் செயல்முறைகள், குடியிருப்பு பகுதிகள், வணிகப் பகுதிகளில் தூய்மை பராமரிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ராசிபுரம் நகராட்சியில் சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் பி.அசோக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகராட்சி சுகாதார அலுவலர் மு.செல்வராஜ் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இந்த விருதினை நகராட்சி சுகாதார அலுவலர் மு.செல்வராஜிடம் வழங்கி கெளரவித்தார். ராசிபுரம் நகராட்சி ஆணையளர் எஸ்.கோபிநாத், துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.