ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள பொதுக்கிணற்றை மூடுவதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் ஐஒசி பெட்ரோல் நிலையம் அருகே பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்றினை அப்பகுதியினர் பல ஆண்டுகளாக பொது காரியங்களுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

புறம்போக்கு நிலத்தில் உள்ளதாக கூறப்படும் இந்த கிணற்றினை அப்பகுதியில் உள்ள தனியார் மண்கொட்டி மூடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பொது கிணற்றை மூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ராசிபுரம் வட்டாட்சியரை நேரில் சந்தித்து நந்தவன மீட்புக் குழுவினை சேர்ந்த எஸ்.குமார், கு.கந்தசாமி, கி.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட ராசிபுரம் வட்டாட்சியர் சசிக்குமார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.