நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் கேட்ட நகராட்சி வரிவசூலிப்பாளரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வரிவசூலிப்பாளர் ரகுபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராசிபுரம் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் அரசு திட்டங்கள், மகளிர் உரிமைத்தொகை, ரேஷன் கார்டு, சொத்துவரி பெயர் மாற்றம், வீட்டு வரி ரசீது, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. ராசிபுரம் நகராட்சி, 15 -வது வார்டை சேர்ந்தவர் வழக்குரைஞர் அன்பழகன் (50). இவரது தந்தை சுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது தாய் லட்சுமி பெயருக்கு குடிநீர் இணைப்பை மாற்ற வேண்டும் என முகாமில் மனு அளித்தார்.
ராசிபுரம் நகராட்சியில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வரும் நாமக்கலை சேர்ந்த ரகுபதி (35), என்பவர் அலைபேசியில் வழக்குரைஞர் அன்பழகனை அழைத்து பெயர் மாற்றம் செய்ய கோப்பு ஆணையாளரின் கையெழுத்துக்கு தயாராக உள்ளதாகவும், ஆணையாளர் பணம் எதிர்பார்க்கிறார் என்றும் கேட்டுள்ளார். இந்நிலையில் இவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து இதனை விசாரித்து நகராட்சி நிர்வாகம் ரகுபதியை பணியை நீக்கம் செய்துள்ளது. இவர் அதிக குடிபழக்கம் உள்ளவர் எனக்கூறப்படும் நிலையில், ஏற்கனவே இரு முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.