எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ். இவர் தற்போது குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வருகிறார். ராசிபுரம் அருகேயுள்ள பண்ணை வீட்டில், அருண் பிரகாஷின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை 2 சொகுசு கார்களில் வந்தவர்கள், பண்ணை வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளனர். சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு இரும்பு கேட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிடவே அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஆயில்பட்டி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார், டிரோன் மற்றும் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளை முயற்சியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.