நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் நீதிபதியாக இருந்து அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ள டாக்டர் வீ. ராம்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்கமும், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு நாமக்கல் சிவில் வழக்கறிஞர் சங்க தலைவர் டி.மோகன்ராஜ் தலைமை வைத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக சுமார் 700-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் வீ. ராம்ராஜ். இந்தியாவிலேயே மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற அளவில் அதிக சமரச தீர்வுகளை வழங்கியவர். நீதிமன்ற உட் கட்டமைப்பை மேம்படுத்தியது நீதிமன்ற நிர்வாகத்தை வலுப்படுத்தியது மற்றும் விரைவான நீதியை வழங்கியது ஆகியன அவரது செயல்பாடுகளின் முக்கிய அம்சங்கள் என்று என்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் ஆர். ரமோலா தெரிவித்தார்.

நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர். அய்யாவு, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர்கள் கோபால், ராஜவேலு, மூத்த வழக்கறிஞர்கள் குமரேசன், காளியண்ணன், ஐயப்பன், இளங்கோவன், திருச்செங்கோடு பரணிதரன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். இவர் நாமக்கல்லில் பதவி ஏற்கும் போது பத்தாண்டுகளுக்கு மேலான வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது ஓராண்டுக்கு மேலான வழக்குகள் கூட நிலுவையில் இல்லாத அளவுக்கு வழக்குகளை தீர்த்து வைத்தவர் வீ. ராம்ராஜ் என்று நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

முழுமையான சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் அதற்கான பணிகளை மேற்கொண்டு நுகர்வோர் நீதிமன்றத்துக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பொதுமக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை எளிதில் அணுகும் வகையில் வழிகாட்டும் பலகைகளை திருச்செங்கோடு சாலையில் இருந்து நுகர்வோர் நீதிமன்றம் வரை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். நீதிமன்ற வளாகத்துக்குள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதோடு நுகர்வோர் வழக்குகளை எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும்? என்பது உட்பட பல்வேறு தகவல்களை நீதிமன்ற வளாகத்தில் பலகைகளாக ஏற்படுத்தியவர் வீ. ராம்ராஜ் என்று நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். தங்களுக்கு ஒழுக்கம், நேர மேலாண்மை, பேச்சாற்றல், எழுத்தாற்றல் உள்ளிட்டவற்றை வளர்ப்பதற்கு காரணமாக இருந்தவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி வீ. ராம்ராஜ். அவர் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இணையான சம்பள விகிதத்தில் உள்ள பதவிக்கு சென்றாலும் எங்களுக்கு பெரிய இழப்பாகவே நாங்கள் கருதுகிறோம் என்று நிகழ்ச்சியில் பேசிய சட்டக் கல்லூரி மாணவ, மாணவர்கள் தெரிவித்தனர்.
இறுதியில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராம்ராஜ் ஏற்புரை வழங்கிப் பேசினார். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு பாதுகாப்பு அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, இதைப்போலவே, மனித உரிமைகள் ஊழல் ஒழிப்பு உட்படஒவ்வொரு பொருள் தொடர்பாகவும் சட்டங்கள் இயற்றப்பட்டு அதற்கான அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மக்களின் உரிமைகளையும் அதனை காக்கும் அமைப்புகளை பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று வீ. ராம்ராஜ் தெரிவித்தார்.
குழந்தைகளின் உரிமைகள் எவை? என்பதை தெரிந்து கொண்டு அவற்றைக் காக்கும் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தை பற்றிய விவரங்களையும் முழுமையாக அறிந்து கொண்டால்தான் குழந்தை உரிமை மீறல்களை தவிர்க்க இயலும். நுகர்வோரின் உரிமைகள் எவை? என்பதையும் நுகர்வோரின் பிரச்சனைகள் எவை? என்பதையும் அறிந்து கொண்டு அதனை தீர்க்க நுகர்வோர் நீதிமன்றத்தை எவ்வாறு அணுகுவது? எவ்வாறு வழக்கு நடத்துவது? என்று விவரங்களை தெரிந்து கொண்டால்தான் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்று வீ. ராம்ராஜ் தெரிவித்தார்..
நல்லாட்சிக்கும் மக்களின் நல் வாழ்விற்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாகும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் அமைப்புகளான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கப்பட வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசும் வழக்கறிஞர்கள் சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என்று வீ. ராம்ராஜ் வலியுறுத்தினார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிமன்ற ஊழியர்கள் சார்பில் டாக்டர் வீ. ராம்ராஜ் அவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தினர்