ராசிபுரம் – வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி)யில், 22-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை, பி.எஸ்.ஜி கலை அறிவியில் கல்லூரி(தன்னாட்சி)யின் நுண்ணுயிரியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர். ஆர். ராஜேந்திரன் பங்கேற்றார். அவர் தமது உரையில், பட்டம் வாங்குவது எளிதானதல்ல, மாணவர்கள் தங்களுடைய அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும், செலுத்திய பின்பே பட்டம் கிடைக்கிறது. ஆனால் இது முடிவும் அல்ல, இதுதான் வாழ்வின் துவக்கம் ஆகும். போட்டி நிறைந்த இந்த உலகை இனிதான் நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள். அதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பட்டத்தை வெறும் சான்றிதழாக கருதாமல் அது ஒரு பொறுப்பு என்று கருதி சமுதாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு மாணவரும் பங்களிக்க வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர். எஸ். பி. விஜய்குமார் பட்டம்பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறி, சிறப்பு விருந்தினரைப் பற்றி அறிமுகம் செய்தார். கல்லூரியின் செயலாளர் இரா.முத்துவேல் தலைமை தாங்கினார். இயக்குநர்-கல்வி முனைவர் இரா.செல்வகுமரன், துணை முதல்வர் முனைவர் ஆ.ஸ்டெல்லாபேபி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பி.கௌரிசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினருடன் இணைந்து பட்டங்களை வழங்கினர்.
இவ்விழாவில் கல்லூரி அளவில்(தன்னாட்சி) முதலிடம் பிடித்த இளநிலை மாணவ, மாணவிகள் 17 பேருக்கும், முதுநிலை மாணவ, மாணவிகள் 10 பேருக்கும் என மொத்தம் 27- பேருக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரி அளவில் 75 இளநிலை மாணவர்களும், 16 முதுநிலை மாணவ, மாணவிகளும் என மொத்தம் 118 – பேர் தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
தங்க பதக்கம் மற்றும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்களுடன் சேர்த்து, 1003 இளநிலை மாணவ, மாணவிகள், 244 முதுநிலை மாணவ, மாணவிகள் என மொத்தம் 1247 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவின் இறுதி நிகழ்வாக பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், கல்லூரி முதல்வர் வாசித்த உறுதிமொழியை வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனர். விழாவில்;, புல முதன்மையர்கள், அனைத்துத் துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பட்டம் பெற்ற மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரால்லாப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.