ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் மாசி மகா சிவராத்திரி திருவிழாவினை தொடர்ந்து முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோவிலின் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் பிப்.15-ல் தொடங்கி நடைபெற்றது.

நாள்தோறும் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனம், யானை வாகனம், கிளி வாகனம், புலி வாகனம்க, காமதேனு வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா அழைத்து வரப்பட்டார். பிப். 26 ஆம் தேதி அம்மன் சக்தி அழைத்தல், அக்னிகுண்டம் பற்றவைத்தல், சுவாமி ஊஞ்சலாடுதல், பந்த பலியிடுதல், பூ மாலை உள்ளிட்ட நிகழ்வுகளும், பிப். 27 காலை தீ மிதித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பிப். 28 ஆம் தேதி சுவாமி ரத ஊர்வலம் நடந்தது. முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், நடராஜர் உற்சவ மூர்த்திகள் சிங்க வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன் பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டுவந்திருந்த ஆடு, கோழிகளை ஆடு கடிக்கும் பூசாரிகள் ஆக்ரோஷத்துடன் கடித்து மயானக்கொள்ளை நடத்தினர். ஆடுகள், கோழிகளை உயிருடன் கடித்து மயானத்தில் உள்ள பேச்சி அம்மனுக்கு காவு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து முக்கிய வீதி வழியாக பம்பைகள் முழங்க வேடம் அணிந்து வந்த பூசாரிகள் நடனமாடியவாறு சென்றனர். இந்நிகழ்ச்சியில், ராசிபுரம், புதுப்பாளையம், முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், கட்டனாச்சம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை காண வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். அங்காளம்மன் சேவா டிரஸ்டு நிர்வாகிகள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் எஸ்.சுப்பிரமணியம், எஸ்.பிரபு, ஏ.மாதேஸ்வரன், ஏ.விஸ்வநாதன், உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
