நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக கோவில் வளாகம் முழுதும் பிளெக்ஸ் பேனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகா குண்டம் இறங்கும் இடம் மிக குறுகிய இடம். இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

கூட்ட நெரிசலில் பலரும் மாடி மீதும், மரங்கள் மீதும், பலர் பிளெக்ஸ் பேனர்கள் மீதும் ஏறி நின்று குண்டம் திருவிழாவை காண முயற்சிப்பார்கள். போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், இவைகள் தவிர்க்க முடியாது. தேரோட்டம் கோவில் வளாகத்தில் இருந்துதான் தொடங்கும். வழியில் ப்ளெக்ஸ் பேனர்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. தேர் அசைந்து வரும் போது, பக்கவாட்டில் மோதி, கீழே விழுந்தாலும் பொதுமக்கள் குறுகிய இடத்தில் எங்கும் ஓட முடியாது. முன்பெல்லாம் பிளெக்ஸ் பேனர்கள் வைக்க, நகராட்சியின் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் மூன்று நாட்கள் முன்பும், நிகழ்ச்சி நடந்து மூன்று நாட்கள் பின்பு பேனர்கள் அகற்ற வேண்டும் என்பது நகராட்சி விதி. ஆனால் இதனை நகராட்சி நிர்வாகம் செய்யும் நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் என யாரும் பின்பற்றுவது இல்லை. இது தவிர நகரின் முக்கிய இடங்களான பஸ் ஸ்டாண்ட் எதிரில், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, சவுண்டம்மன் கோவில் பிரிவு காளியம்மன் கோவில் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் அதிக அளவிலான பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் மறைத்து, விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, விபத்து அபாயம் ஏற்படாமல் இருக்க, பிளெக்ஸ் பேனர்கள் அமைக்க விதிமுறையை கடைபிடிக்காத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.