நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலப் பேச்சாற்றல் மேம்பாட்டிற்கான பயற்சி புத்தகம் வெளியீட்டு விழா ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனப் பேராசிரியர் சுமதி எழுதிய குஷி ஆங்கிலப் புத்தகம் வெளியீட்டு விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டம் -2982 ஹேப்பி ஸ்கூல் சேர்மன் கே.எஸ். கருணாகர பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ரோட்டரி சங்கத்தின் முன்னாள் உதவி ஆளுநரும், திட்ட ஸ்பான்சருமான டாக்டர் எம்.ராமகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வம் பெற்றுக்கொண்டார்.

புத்தகத்தை வெளியிட்டு டாக்டர் எம். ராமகிருஷ்ணன் பேசுகையில், சர்வதேச அளவில் அமைதி, சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து சர்வதேச ரோட்டரி சங்கம் செயல்படுகிறது. குறிப்பாக போலியோவை முற்றிலும் ஒழித்ததில் ரோட்டரி சங்கத்து பங்குண்டு. அந்த அடிப்படையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் கல்வியில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற அடிப்படையில் அவர்களின் ஆங்கில மொழி ஆற்றல் மேம்பட ஆசிரியர்கள் மூலம் குஷி ஆங்கிலப் புத்தகம் வெளியிட்டு வழங்கப்படுகிறது என்றார்.
நாமக்கல் ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் மு.செல்வம் பேசுகையில், ஒருவருக்கு ஆங்கிலம் தெரிந்தால் அவரால் உலகோடு உறவாட முடியும். எனவே அனைத்து நாடுகளும் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் கருதி ஆங்கிலத்தை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றன. ஆங்கிலம் அயல்மொழி என்பதால் கற்பித்தலில் புதிய யுத்திகளையும் புதுமைகளுடன் இப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் பயன்பெறுவர் என்றார். வகுப்பறைகளில் தினமும் அடிக்கடி நிகழும் செய்தி பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு 100 வாக்கியங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலின் முதல் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளியில் ஆங்கிலத்தில் செய்தி பரிமாற்றம் செய்ய உதவும் என நூல் ஆசிரியர் சுமதி கூறினார் .
புத்தக வெளியீட்டு விழா மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தகம் சார்ந்த பயிற்சியில் தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் 72 ஆசிரிய, ஆசிரியையர் பங்கேற்றனர். இப்புத்தாக வெளியீட்டு விழாவில் ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் கு.பாரதி , ராசிபுரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் சிட்டி(எ)வரதராஜன், கே.குணசேகரன், மூத்த உறுப்பினர் டி.பி.வெங்கடாஜலபதி, நிர்வாகிகள் ஆர். நடராஜன், ஜீ.ராமலிங்கம், இன்னர் வீல் சங்கத் தலைவர் சுதா மனோகரன், பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் ராசிபுரம் ரோட்டரி சங்க செயலாளர் கே. ராமசாமி நன்றி கூறினார்.