நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகரன் மனைவி பிரேமா. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆர். கவுண்டம்பாளையத்தில் வசித்து வருபவர் காங்கேய கவுண்டர் மகன் செங்கோட்டையன். இவர்கள் இருவரும் நாமக்கல்லில் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள அக்வா கேர் ஆரோ சிஸ்டம் என்ற கடையில் வீட்டுக்காக தண்ணீர் சுத்திகரிப்பான் உபகரணங்களை கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் வாங்கியுள்ளார்கள்.

விற்பனை செய்யப்படும் வகை உபகரணம் 6 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்று விற்பனையாளர் தெரிவித்ததால் ஒவ்வொரு உபகரணத்துக்கும் ஒவ்வொருவரும் ரூ 20,000/- செலுத்தியுள்ளார்கள். வீட்டில் அதனை பொருத்திய பின்பு தண்ணீரின் கொள்ளளவை அளவிட்ட போது நான்கு லிட்டர் மட்டுமே பிடிக்கக் கூடியதாக உபகரணம் இருந்துள்ளது. விற்பனை செய்த கடைக்காரரிடமும் உபகரணத்தை உற்பத்தி செய்த கெண்ட் ஆரோ சிஸ்டம் நிறுவனத்திடமும் பலமுறை புகார் அளித்தும் ஆறு லிட்டர் கொள்ளளவு கொண்ட உபகரணத்தை அவர்கள் வழங்கவில்லை.
மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் உபகரணத்தை விற்பனை செய்த கடைக்காரர் மற்றும் உற்பத்தி செய்த நிறுவனத்தின் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ஏப்ரலில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் 2025 ஜனவரி 28 – ல் தீர்ப்பளித்துள்ளனர்.
பணம் செலுத்தியது ஆறு லிட்டர் கொள்ளளவு கொண்ட உபகரணத்துக்கு என்றும் ஆனால் வழங்கப்பட்டது நான்கு லிட்டர் கொள்ளளவு கொண்ட உபகரணம் என்றும் சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபித்துள்ளார்கள். உபகரணத்தை விற்பனை செய்த கடைக்காரர் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிகளின் படி ரசீது வழங்கவில்லை என்றும் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி விற்பனை செய்தது நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் உபகரணத்தை விற்பனை செய்த கடைக்காரர் இழப்பீடாக ரூபாய் 30 ஆயிரமும் உபகரண உற்பத்தி நிறுவனம் ரூபாய் 20 ஆயிரமும் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.