ராசிபுரம் அருகேயுள்ள போதமலைக்கு முதன்முறையாக 31 கி.மீ. தொலைவிற்கு மலைப்பாதையில் ரூ.139.65 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா நேரில் சென்று சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலையில் கீழூர், மேலூர் , கெடமலை ஆகிய கீழூர் ஊராட்சியில் அடங்கிய மூன்று குக்கிராமங்களை உள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதி இல்லை. ஒற்றையடி பாதையில் தான் அங்குள்ள மக்கள் 7 கீ.மீ. தொலைவிற்கு தான் கல்வி, மருத்துவம், விவசாயம், சந்தை போன்றவற்றிற்கு சென்று வரவேண்டும். இதனையடுத்து மூன்று கிராமங்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசின் பசுமை தீர்ப்பாயம், வனத்துறை ஆகியவற்றின் ஒப்புதலோடு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.139.65 கோடி நிதி ஒதுக்கி, 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, வசிக்கும் பொதுமக்கள் விபரம், சாலை பணிகள் விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் சாலையை தரமானதாக அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.