தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக்கான தேர்தலில் அதிமுக படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் ராசிபுரம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டமன்றத்துக்குள் நுழைந்த 4 எம்எல்ஏ-களில் ஒருவர் மறைந்த பி.ஆர். சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராசிபுரம் அருகேயுள்ள டி.பச்சுடையாம்பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தரம் (74). 1972 -ம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினரான இவர், நாமகிரிப்பேட்டை கூட்டுறவு நிலவள வங்கியின் இயக்குனர், பச்சுடையாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், நாமகிரிப்பேட்டை ஒன்றிய அதிமுக செயலாளராகவும், நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக செயலாளராக 1997 முதல் 2000 வரையும் பதவியில் இருந்தார். பின்னர் மாவட்ட அதிமுக அவைத் தலைவராகவும் இருந்தார். தொகுதியில் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். பழகுவதில் தன்மையானவர். நல்லதோ கெட்டதோ மனதில் தோன்றியதை வார்த்தையாக வெளிப்படுத்துவதும், சில நேரங்களில் முன்கோபமும் அவரது சுபாவம். அரசியலில் வல்லவர் என்பதைவிட நல்லவர் என சொல்லலாம்.

ராசிபுரம் தொகுதியின் 1996, 2001ல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். 1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து நால்வர் மட்டுமே சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் பி.ஆர்.சுந்தரமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா கூட தோல்வியை தழுவினார் என்பது வரலாறு. அப்போதைய தேர்தல் மூலம் சட்டமன்றத்தில் நுழைந்து ஆளும் திமுக அரசுக்கு தனது பேரவை செயல்பாடுகளால் குடைசலை கொடுத்தார். பின்னர் 3-வது முறையாக 2006-ல் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பிய அவர் கடும் போட்டிக்கு இடையே சீட் பெற்று, நாமக்கல் தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்தது. இத்தேர்தலில் 3 லட்சத்துக்கு அதிகமான வித்திசாயத்தில் வாக்குகள் பெற்று வென்று மக்களவை தொகுதி உறுப்பினராக வலம் வந்தார். அடுத்த நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்காததால் மனவெதும்பிய அவர், பின்னர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சியின் துணைத்தலைவராக செயல்பட்டார்.
அதிமுகவையும்- பி.ஆர்.சுந்தரத்தையும் பிரித்து பார்க்க முடியாத ஆதரவாளர்கள்
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஒ.பி.எஸ்., போர்கொடி தூக்கியபோது ஒபிஎஸ் உடன் இணைந்து செயல்பட்டார். அதிமுகவையும், பி.ஆர்.சுந்தரத்தையும் பிரித்தே எண்ணிப் பார்க்க முடியாத நிலையில், உட்கட்சி மனக்கசப்பால் திடீரென 2021-ம் ஆண்டு தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள சுயமாக முடிவெடுத்தார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தன்னை திமுக இணைந்து கொண்டார். பின்னர் இவருக்கு கட்சியில் திமுக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த முடிவு அவரது அரசியல் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர். இந்நிலையில் உடல் நலம் பாதிப்பால் திமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் என்ற கட்சிப்பணியில் ஆர்வம் காட்டாமல் கடந்த ஒராண்டுக்கு மேலாக ஒதுக்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை அவரது வீட்டில் உடல் நலனில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மனைவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் இரங்கல்
பி.ஆர்.சுந்தரம் உயிரிழந்ததையடுத்து அவரது மனைவி சுந்தரி அம்மாளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார். மறைந்த பி.ஆர்.சுந்தரத்துக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் உள்ளிட்ட அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினரும், பொதுமக்கள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருக்கு மனைவி சுந்தரி, அமெரிக்காவில் வசித்து வரும் மகன் தினேஷ் ஆகியோர் உள்ளனர். இவரது இறுதி சடங்குகள் 18.1.25-ல் காலை 9 மணி அளவில் ராசிபுரம் இல்லத்தில் நடத்தப்பட்டு, பச்சுடையாம்பாளையம் கிராமத்தில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.