அசோக் லேலாண்ட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு வாகனத்தில் ஏற்பட்ட பழுதை உத்தரவாதத்தில் காலத்தில் சரி செய்து தர பணம் வசூலித்த தனியார் வாகன விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு பெற்ற பணத்தையும் இழப்பீட்டையும் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள காந்தி நகரில் வசித்து வருபவர் பச்சமுத்து மகன் சிவக்குமார். இவர் சுய தொழில் செய்வதற்காக அசோக் லேலாண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சரக்கு வாகனம் ஒன்றை நாமக்கல், சேலம் சாலையில் உள்ள தனியார் டீலரிடம் (சுவர்ணாம்பிகை மோட்டார் ) கடந்த 2020 நவம்பரில் வாங்கியுள்ளார். இந்த வாகனத்துக்கு வாகன உற்பத்தியாளரால் ஓராண்டு காலம் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. ரூ 5,250 கூடுதலாக செலுத்தினால் மூன்றாண்டுகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று வாகனத்தை விற்பனை செய்த டீலர் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையையும் சிவக்குமார் (40) வாகனத்தை வாங்கும் போது செலுத்தியுள்ளார்.
வாகனமானது 5,000, 10,000, 15,000 கிலோமீட்டர் ஓடிய போது வாகனத்துக்கு டீலர் கட்டணமில்லாத சர்வீஸ் செய்து கொடுத்துள்ளார். வாகனம் 30,000 கிலோமீட்டர் இயக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டதால் நான்காவது கட்டணமில்லா சர்வீஸை வாகன உரிமையாளரால் பெற இயலவில்லை. உள்ளூரிலேயே வாகனத்துக்கு ஆயில் மாற்றி வாகனத்தை பொதுமுடக்க காலத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு இயக்கி வந்துள்ளார்.
கொரோனாவிற்கு பின்னர் 50,000 கிலோ மீட்டர் வாகனம் ஓடிய நிலையில் டீலரிடம் வாகனத்தை சர்வீசுக்கு கொடுத்துள்ளார். 30,000 கிலோமீட்டர் சர்வீஸை உத்திரவாத விதியின்படி விநியோகஸ்தரிடம் செய்யாமல் வெளியில் செய்து கொண்டதால் உத்தரவாதம் இனிமேல் வழங்கப்பட மாட்டாது என்று வாகன சர்வீஸ் டீலர் தெரிவித்துள்ளார். வாகனத்தில் பழுதுபட்ட பாகங்களை மாற்ற ரூ 13, 788 /- ஐ வாகன சர்வீஸ் டீலர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். வாகனம் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்பதால் சிவகுமார் அந்த தொகையை செலுத்தி வாகனத்தை சர்வீஸ் செய்து பெற்றுள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் விற்பனை செய்தவரும் சர்வீஸ் டீலருமான தனியார் நிறுவனம் மீது சிவக்குமார் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் (10-12-2024) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என் லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பில், வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் டீலர் சேவை குறைபாடு புரிந்துள்ளதால் வாடிக்கையாளர் செலுத்திய ரூ 13, 788/- மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ 13,000/- ஆகியவற்றை நான்கு வார காலத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் டீலருக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.