பாவை கல்வி நிறுவனங்களில் பாவை தமிழ் மன்றம் வழங்கும் ஆன்றோர் முற்றம் எனும் விழா பாவை விருதுகள் – 24 எனும் தலைப்பில் நடைபெற்றது.
தமிழில் இலக்கியம், சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றில் சிறந்து விளங்கும் ஆன்றோர்களுக்கு பாவை கல்வி நிறுவனம் சார்பில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை (30.11.24) நடைபெற்றது.
விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் மேனாள் பேராசிரியர், தமிழறிஞருமான கு.வெ.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
தமிழ் மொழி, இலக்கியம், எழுத்துக்களுக்கு சமூகத்தின் வாழ்வையே மாற்றும் சக்தி உண்டு:-
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர் கு.வெ.பாலசுப்பிரமணியன் விழாவில் பேசியது: ‘நம் தமிழ்நாட்டில் எழுத்துக்கு மரியாதை தரும் வகையில் இந்த ஆன்றோர் முற்றம் விழா அரங்கேறியிருப்பது அழகான விஷயமாகும். சமூகச் சிந்தனையோடு விருதாளர்களை பார்த்து, அவர்களின் நூல்களை படித்து, ஆராய்ந்து விருது பெறுபவர்களை தேர்வு செய்த விதமும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. தமிழ் உலகின் வாழ்வியல் அம்சங்களை ஒருங்கிணைத்து, அவைகளை மொழி, இலக்கியம், கதை, பண்பாடு, கலாச்சாரம், அறிவியல், சமுதாயம், குழந்தை நல கதை பிரிவு, மொழிபெயர்ப்பு மற்றும் வரலாறு என்ற வடிவில் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் ஆன்றோர்களின் மூலம் இளைய சமூகத்தினை சான்றோர்களாக உருவாக்கும் சாதனையாளர்களை அழைத்து அவரவர் தம் பிரிவில் விருதுகள் வழங்கப்படுவது பாராட்டுக்குரியது. நம் தமிழ் மொழியும், இலக்கியமும், எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கும் ஒரு சமூகத்தின் வாழ்வையே மாற்றும் சக்தி உண்டு. மேலும் சமூகத்தின் இறுக்கத்தை, கொந்தளிப்பை அமர்த்தி, மனத்தெளிவினை வழங்கும் சக்தி எழுத்தாளர்களுக்கு உண்டு. அதேபோன்று முன்னோடிகளின் வாழ்வியல் அனுபவங்கள், இளைஞர்கள் அடுத்தக்கட்ட நிலைக்குச் செல்வதற்கான உந்துதலாகும். இவ்வாறு நீங்கள் வாழ்வினை முன்னேற்றும் கருத்துகளிலும், நூல்களிலும் கவனம் செலுத்தும் போது, நிச்சயம் நம் சமூகம் மேன்மையடைவது உறுதி” என்றார்.
தொடர்ந்து பல் துறை வல்லுநர்கள் ஏற்புரை ஆற்றினர். அவர்கள் தம் உரைகளில், ‘ஒரு தனிமனிதன் சரியான வயதில், தனது புத்திக்கூர்மையையும், திறன்களையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியதின் விளைவாக, இளைஞர்களிடையே நல் மாற்றங்களை உருவாக்க முடியும், பல சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு பாவை கல்வி நிறுவனத் தலைவர் ஒரு எடுத்துகாட்டு. எங்களைப் போன்ற படைப்பாளிகளை, எழுத்தாளர்களை, கலைஞர்களை, சிந்தனையாளர்களை கொண்டாடுவது உயிரோட்டமான செயலாகும். எங்களுக்கு அவை மேலும் ஊக்கமாக அமையும். இன்றளவும் பல நாடுகளில் மொழி வடிவம் இல்லை. அப்படியே மொழி இருந்தாலும் இலக்கியம் இல்லை. ஆனால் மூத்த மொழியாம் நம் தமிழ் மொழி தொன்மை மிகுந்த மொழியாகும். இலக்கிய நயம் மிகுந்த மொழியாகும். இலக்கியங்கள் காலத்தை தாண்டி வாழும் அற்புத படைப்பாகும். எனவே நாம் தமிழ் மொழியிiனை நாம் கொண்டாட வேண்டும். மேலும் இலக்கியத்தின் மூலமாக நம் மண்ணின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், வீரம், போர் குணம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். அந்த மொழி நமக்கு அறிவைக் கொடுக்கிறது. இந்த உலகத்தில் திருட முடியாத ஒன்று அறிவாகும். எதிரியும் பயப்படும் ஆயுதம் நம் அறிவாகும். உயிர்களாகிய நமக்கு நாச் சுவை மட்டுமின்றி செவிச்சுவையும் அவசியமானதாகும். ஈதலிசைபட வாழ்தல் என்ற குறளிற்கேற்ப நம் உயிருக்கு அவசியமான அறிவு, புகழ், ஞானம் போன்றவற்றையும் நம் தேடி, தேடி பெற வேண்டும். அதற்கு நாம் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அது தான் நம்மை சாதனையாளர்களாக நம்மை உருவாக்கும். நீங்கள் சாதிப்பதற்கு வயதும், சூழ்நிலையும் ஒரு தடையில்லை. ராம் தங்கம் அவர்களின் கவிதை போன்று „இன்னும் எதுவும் தாமதமாகவில்லை. இப்பொழுது முயற்சி செய்தாலும் எவ்வளவோ தூரம் செல்லலாம்… என்ற கவிதைக்கேற்ப தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். செய்வன திருந்தச் செய் என்பதிற்கேற்ப, அனைத்து செயல்களையும் திருத்ததோடு செய்து முடியுங்கள். உழைப்பதற்கு எப்பொழுதும் தயங்காதீர்கள். இவ்வாறு நீங்கள் இலக்கியத்தோடு இசைந்து வாழும் போது உங்களால் பரிபூரணமான, உளப்பூர்வமான வாழ்க்கையை வாழ முடியும். அதன்மூலம் சமுதாயமும் முன்னேறும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று பேசினர்.
விருதுகள் வழங்கல்:
இவ்விழாவில் ‘என்றென்றும் ஆன்றோர்” விருது கலைமாமணி பேராசிரியர் கு.ஞானசம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. மூத்த படைப்பாளி சிறப்பு விருது உஷா சுப்பிரமணியன், மூத்த தமிழ் இலக்கியப் பரிதி விருது கவிஞாயிறு புலவர் பெ.பரமேசுவரன், ‘தமிழ்த் திரை வித்தகர்” விருது மெய்யழகன் திரைப்பட இயக்குநர் ச.பிரேம்குமார், சிறார் கதைச் சிற்பி விருது தமிழ் எழுத்தாளர் கதைச் சொல்லி பவா செல்லதுரை, தமிழ் இலக்கியச் செம்மல் விருது பிரிவில், அறிவியல் புதினத்திற்காக கபிலன் வைரமுத்து, புதினத்திற்காக மேகலா சித்ரவேல், கவிதைக்காக கவிஞர் மனுஷ்ய புத்திரன், தமிழ்க் கதைசொல்லி விருது தீபிகா அருண், சிறார் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பிற்காக யூமா வாசுகி, சிறுகதைக்காக வண்ணநிலவன் மற்றும் ராம் தங்கம் ஆகியோரும் விழாவில் விருதுகள் பெற்றனர்.
முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். விழாவில் பாவை கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் டி.ஆர்.மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், துணைச்செயலாளர் என்.பழனிவேல், பொருளாளர் மருத்துவர் எம்.ராமகிருஷ்ணன், இயக்குநர் (சேர்க்கை) வழக்கறிஞர் கே.செந்தில், இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் கே.கே.ராமசாமி, தமிழ் ஆர்வலர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் நன்றி கூறினார்.