சுதந்திரப் போராட்டத் தியாகி டாக்டர் பி.வரதராஜூலு நாயுடுவிற்கு அவரது சொந்த ஊரான ராசிபுரம் பகுதியில் முழு உருவச்சிலை, மணி மண்டபம் அமைக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விடுதலை களம் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
விடுதலை போராட்ட வீரர் தளி எத்தலப்ப நாயக்கருக்கு தளி பகுதியில் முழு உருவச்சிலை அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.மணி தலைமையில் உடுமலைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.24-ல்) நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை களம் கட்சியின் நிறுவனர் கொ.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் , விடுதலை களம் கட்சியின் நிறுவனர் கொ.நாகராஜன் தியாகி டாக்டர் பி.வரதராஜூலு நாயுடுவிற்கு சிலை அமைக்க வேண்டி மனு அளித்தனர். மேலும் அவர் மனுவில், மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியார், ராஜாஜி, பெரியார், காமராஜர் போன்றவர்களுடன் இணை நின்று போராட்டத்தில் பங்கெடுத்தவர், சிறந்த தொழிற்சங்க வாதியாகவும், பத்திரிகையாளராகவும் சுதந்திர போராட்டத்தினை முன்னின்று நடத்தியவர். மேலும் அவர் தானமாக கொடுத்த நிலத்தில் இன்று பல அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இது போன்ற தலைவருக்கு அவரது சொந்த ஊரான ராசிபுரம் பகுதியில் சிலை மற்றும் மணி மண்படம் அமைக்க நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.