நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில்நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் மாணிக்கம், மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயலாளர் கருணாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நாமக்கல் நகரில் பேருந்துகள் சாலை ஓரங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி விடுவதால் உண்டாகும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டியும், நாமக்கல் நகர பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்லாததை கண்டித்தும், பொதுமக்களுடன் இணைந்து நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது 46 இணைப்பு சங்கங்களின் ஆதரவோடு வருகிற 25/11/2024 திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பொதுமக்களின் சிரமம் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கத்தின் பொருளாளர் முரளி நன்றி கூறினார்.