ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி முதல் பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் பரம்பரை அறக்கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஸ்ரீகைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், இளநீர், திருநீர், குங்குமம், பால், தேன் உள்ளிட்ட வாசனை பொருட்களால் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவரான ஸ்ரீகைலாசநாதர் சுவாமி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீகைலாசநாதரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னாபிஷேக பரம்பரைக் கட்டளைதாரர் சுரேஷ்குமார், கோவில் அர்ச்சகர்கள் உமாபதி சிவம், தட்சணாமூர்த்திசிவம், ஸ்ரீமதுதில்லை சிவம் ஆகியோர் செய்திருந்தனர்.