ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் மறைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பத்தினர் 144 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் உடல் நலக்குறைவு, விபத்து போன்றவற்றால் மறைந்த கட்சியினர் குடும்பத்துக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் உடல் நல குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த திமுக கட்சி உறுப்பினர்களுக்கு கலைஞர் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஷ் குமார் கலந்துகொண்டு மறைந்த 144 திமுக உறுப்பினர்கள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.10,000 ரூபாய் வீதம் ரூ.14,44,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
முன்னதாக மறைந்த முன்னாள் நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் வாமலை திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, சீராப்பள்ளி பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி செயலாளர் அன்பழகன்,புதுப்பட்டி பேரூராட்சி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.