ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வாட்டாட்சியர் அலுவலகத்தின் மேல்மாடியில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம், இ-சேவை மையம் போன்றவை உடல் ஊனமுற்றோர், பொதுமக்களின் வசதிக்காக கீழே தரை தளத்தில் உள்ள அறைக்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது. இங்குள்ள ஆதார் அட்டை தொடர்பான சேவை மையம் சுமார் இரு மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
இ-சேவை மையம் மட்டும் செயல்பட்டு வருகிறது. ஆதார் சேவை மையத்தில் மையத்தின் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வது, கட்டணம் செலுத்துவது போன்ற நிர்வாக கோளாறு காரணமாக மையத்திற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, பணியாளர்கள் சிலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இரு மாதங்களாக மையம் செயல்படாத நிலையில் ஆதார் தொடர்பான பொதுமக்களுக்கான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் பிற சேவை மையங்களை தேடிச் செல்கின்றனர். எனவே இதனை விரைந்து செயல்பாடுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டுவருவார்களா அரசு அதிகாரிகள்?