சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் தமிழ்நாட்டில் நுழைய விடமாட்டோம் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக இந்திய குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2019 டிசம்பரில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மேற்கூறிய மதத்தை சேர்ந்தவர்கள் 3 நாடுகளில் இருந்து இந்தியா வந்த பிறகு 6 ஆண்டுகளில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். அதாவது அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் உள்ளிட்டவர்கள் மதசிறுபான்மையினர்களாக உள்ளனர். இவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் குடியேறும்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சிஏஏ வழிவகுக்கிறது. இந்நிலையில் தான் சிஏஏவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதில் முஸ்லிம் மக்கள் பற்றி எந்த விபரமும் இடம்பெறவில்லை.
இதற்கிடையே தான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்பாட்டில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் இஸ்லாமியர்கள் சிஏஏவை எதிர்த்து வருகின்றனர். இதற்கிடையே தான் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சிஏஏ சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்” என்றார்.
இந்நிலையில் தான் குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் அதனை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என தெரிவித்துள்ளார். இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கனவே கிழித்து எறிந்த மக்கள், இம்முறை அதனை அமல்படுத்தத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் தூக்கி எறிவார்கள்.