எல்ஐசி பாலிசிதாரருக்கும், முகவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைக்க வலியுறுத்தி சேலம் கோட்ட பொருளாளர் ரமேஷ் பாபு, தலைமையில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S.மாதேஸ்வரனை சந்தித்து முகவர்கள் மனு அளித்தனர்.
14 லட்சம் முகவர்கள் மற்றும் 30 கோடி பாலிசிதாரரின் நலன் குறித்த கோரிக்கை மனுவில்
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் பாலிசி கொடுக்க வேண்டும் என்ற இலக்கில் சென்று கொண்டுள்ள எல்ஐசி குறைந்தபட்சம் காப்பு தொகை ரூ.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் பாலிசி எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. மேலும் எல்.ஐ.சி. பாலிசியின் பிரிமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது இது மக்களுக்கு ஏற்படும் சுமையாகும் . இந்திய மக்களின் சராசரி வயது 70 க்கு மேல் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எல்ஐசி அதிகபட்ச வயது பாலிசி எடுக்க 50 என்று நிர்ணயித்தது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். முகவர்களுக்கு பாலிசி மீதான கமிஷன் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இது 14 லட்சம் முகவர்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது. இது குறித்து பரிசீலிக்க நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சிக்க வேண்டும்.
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், துணை தலைவர் குழந்தைவேல், துணை செயலாளர் மகேந்திரன் உட்பட நாமக்கல், பரமத்தி வேலூர், ராசிபுரம், கொமாரபாளையம், சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு உட்பட முகவர் சங்க பிரதிநிதிகள், நாமக்கல் தலைவர் திருஞானசம்பந்தம், செயலாளர் சிவகுமார், பழனிசாமி, இளங்கோ, கார்த்திகேயன், மதியழகன், நீதி மோகன், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.