ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதருக்கு அமாவாசையை தொடர்ந்து ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
அமாவாசையை தொடர்ந்து ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதருக்கு வெள்ளிக்கிழமை புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து திரளான பக்தர்கள் ஸ்ரீகைலாசநாதரை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக பால், தயிர், பன்னீர், தேன், திருநீர், சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதர்மசம்வர்த்தினி சன்னதியில் கேதார கெளரி விரதத்தை தொடர்ந்து அம்மனுக்கு ஸ்ரீஅர்த்தாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து விரதம் மேற்கொண்டிருந்த பெண்கள் பூ, பழம்,தேங்காய், அதிரசம் போன்றவற்றை கொண்டு வந்து பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்கள் தரிசித்து விரத்தை முடித்து சென்றனர்.