வீட்டுக் கடனுக்கு இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்தவர் இறந்த நிலையில் அவர் செலுத்திய பிரிமியம் தொகையை மட்டும் திருப்பி வழங்கிய இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் மகனுக்கு ரூ. 37 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி செல்லியாயி பாளையத்தில் வசித்து வந்தவர் கண்ணுச்சாமி. இவர் கடந்த 2023 பிப்ரவரி முதல் வாரத்தில் நாமக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (M/s.Indusind) வீடு கட்டுவதற்காக ரூபாய் 35 லட்சம் கடனாக பெற்றுள்ளார். கடன் நிலுவையில் இருக்கும் போது இறந்து விட்டால் கடனை ஈடு செய்யும் வகையில் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர். நிதி நிறுவனத்தின் மூலமாகவே தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ரூ 1,69,529/- செலுத்தி ஐந்தாண்டுகளுக்கு ரூபாய் 35 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் பாலிசியை கண்ணுச்சாமி பெற்றுள்ளார். (M/s. ஐ சி ஐ சி ஐ ப்ருடன்சியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி)
இந்நிலையில் திடீரென 2023 மார்ச் இறுதியில் கண்ணுச்சாமி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீட்டுத் தொகை ரூபாய் 35 லட்சத்தை பெற்று தருமாறு வங்கியிடம் கடிதம் மூலம் இறந்தவரின் மகன் கிருபாகர் கேட்டுள்ளார். கடிதம் வழங்கிய ஓரிரு தினங்களில் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து இறந்தவர் மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ளாததால் பாலிசி ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதால் காப்பீட்டுத் தொகை வழங்க இயலாது என்று கிருபாகருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணுசாமி செலுத்திய இன்சூரன்ஸ் பிரிமியம் ரூ 1,69,529/- ஐ மட்டும் அவரது வங்கிக் கணக்குக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் அனுப்பி உள்ளது.
இதனால், கடந்த 2023 நவம்பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இறந்தவரின் மகன் கிருபாகர் வங்கியின் மீதும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்கு தாக்கல் செய்தார். இன்சூரன்ஸ் பிரீமியத்தைப் பெற்றுக் கொண்ட சில நாட்களிலேயே மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையை தருமாறு கண்ணுச்சாமிக்கு எஸ். எம். எஸ். மற்றும் கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால், அவர் மருத்துவ பரிசோதனை அறிக்கையை வழங்கவில்லை இதனால்தான் அவரது பாலிசியை ரத்து செய்து விட்டோம் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு குறைபாடானது என்று தெரிவித்துள்ளனர். பிரிமிய பணத்தை பெறுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததற்கான ஆதாரத்தையும் பிரிமிய பணத்தைப் பெற்ற சில நாட்களில் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தகவல் வழங்கினோம் என்று கூறுவதற்கு அஞ்சலக ஒப்புகை அட்டை போன்ற எந்த ஒரு ஆதாரத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை. இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றவர் இறந்ததை வங்கியில் தெரிவித்த பின்னர் வங்கியால் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்ட சில நாட்களில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாததால் பாலிசி ரத்து செய்யப்பட்டு விட்டதாக எஸ்எம்எஸ் மற்றும் கடிதம் அனுப்புவது ஏற்றுக் கொள்ளத் தகுதி அல்ல என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் மகனுக்கு காப்பீட்டுத் தொகை ரூபாய் 35 லட்சத்தையும் இறப்பு குறித்து தெரிவிக்கப்பட்ட நாள் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை காப்பீட்டு தொகைக்கு ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியையும் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் இரண்டு லட்சத்தையும் நான்கு வாரங்களுக்குள் கடன் வழங்கிய வங்கியில் இறந்தவரின் மகனுக்கு உள்ள கணக்கில் செலுத்த வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணத்தை வங்கியில் இறந்தவர் பெற்றுள்ள கடனுக்கு வரவு வைத்து இறந்தவர் பெற்ற வீட்டுக் கடன் கணக்கை வங்கி முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் மீதத்தொகை இருப்பின் அதனை இறந்தவரின் மகனுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.