ராசிபுரம் அருகேயுள்ள வேலம்பாளையம் பகுதியில் மேடு பள்ளம் நிறைந்த சாலைகள் நீண்டகாலமாக சீரமைக்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி ஊராட்சிப் பகுதியை சேர்ந்தது வேலம்பாளையம், காட்டுக்கொட்டாய் கிராமங்கள். இக்கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியாயிபாளையம், பெருமாகவுண்டம்பாளையம் போன்ற சிறிய கிராமங்கள் உள்ளன. இதனை சுற்றி விவசாயிகள், விசைத்தறித் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்கள் நாள்தோறும் ராசிபுரம்,காக்காவேரி, நாமகிரிப்பேட்டை, சிங்களாந்தபுரம், தொ.ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வரும் பிரதான சாலையாக இது உள்ளது. ஆனால் நீண்டநாட்களாக சீரமைக்கப்படாமல் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஒட்டுகள்,பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகின்றனர். மேலும், இந்த சாலைகளில் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையை உடனே சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பலமுறை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மனு அனுப்பியும் பலனில்லை என்பதால், அரசு இதில் தலையிட்டு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதியினர்.