நாமக்கல் மாவட்ட பட்டாசு வணிகர்கள் சங்கத்தின் சார்பில் பட்டாசு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை வகித்தார். பட்டாசு வணிகர்கள் சங்கத்தின் தலைவர் நலவடி லோகேஷ் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஜெயகுமார் வரவேற்றுப் பேசினார்.
பட்டாசு வணிகர்கள் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசிய ஜெயக்குமார் வெள்ளையன் வலியுறுத்தினார்.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் செந்தில்குமார், பட்டாசு வணிகர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு விசயங்கள் குறித்து விளக்கி பேசினார். நாமக்கல் மாவட்ட துணை தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடாசலம், விபத்து நடைபெறும் காரணங்கள் குறித்தும், அதை தடுக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.
முன்னதாக பட்டாசு வணிகர்கள் பதுகாப்புடன் வணிகம் செய்வோம் எனவும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கூட்ட முடிவில் சங்கத்தின் பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.
இக்கூட்டத்திற்கு பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், இணை செயலாளர் எவரெஸ்ட் ராஜா, அமைப்பாளர் மரக்கடை அருண்குமார், இணை அமைப்பாளர் மார்க்கெட் சிவக்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன் மற்றும் பட்டாசு வணிகர்கள் கலந்துகொண்டனர்.