இ-பைக் பேட்டரிகள் விரைவில் செயலிழந்த நிலையில், அதனை மாற்றுத்தராத நிறுவனத்தின் மேல் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து 7 வாடிக்கையாளர்களுக்கு ரூ.13.65 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் நகரில் இ.பி. காலனியில் வசிக்கும் ஹரிச்சந்திரன் மனைவி தாரணி (25), நல்லி பாளையத்தில் வசிக்கும் நல்லுசாமி மனைவி என். கமலா (36), குமாரி பாளையத்தில் வசிக்கும் நவலடி மகன் என் ராமநாதன் (57), நல்லி பாளையத்தில் வசிக்கும் ஜெயக்குமார் மனைவி சுமதி (45), நாமக்கல் மாவட்டம், வலையபட்டி அருகே உள்ள வடுகப்பட்டியில் வசிக்கும் கணேசன் மகன் ஜி. பிரசாந்த் (26), சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி, தெற்கு திருமலை கிரியில் வசிக்கும் கணேசன் மகன் ஜி. எஸ். கோகுல்ராஜ் (34), சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியில் வசிக்கும் கணேசன் மகன் ஜி. பிரபாகரன் (47) ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கல் நகரில் பரமத்தி சாலையில் உள்ள ராயல் இ.வி. பைக்ஸ் என்ற நிறுவனத்தில் பேட்டரியால் இயங்கும் மின்சார பைக் வாங்கியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பியூர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார பேட்டரியால் இயங்கும் பைக்குகளை ராயல் இ.வி. பைக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. இந்த வாகனங்களை விலைக்கு வாங்கிய சில மாதங்களுக்குள்ளாகவே வாகனத்தின் பேட்டரி செயல் இழந்து வாகனத்தை ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாகனத்தை விற்பனை செய்த டீலரான ராயல் இபி பைக் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் பொருத்தியிருந்த பேட்டரிகளுக்கு மூன்றாண்டு காலம் வாகனத்தை தயாரித்த நிறுவனத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் செயலிழந்த பேட்டரிகளை வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மாற்றி வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனத்தின் மீதும் விற்பனை செய்த டீலர் மீதும் வழக்கு தாக்கல் செய்தனர்.
மின்சார பேட்டரியால் இயங்கும் வாகனத்தை வாங்கிய வாடிக்கையாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகளிலும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் 15-10-2024 -ல் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் உற்பத்தி குறைபாடு உள்ள பேட்டரிகளை கொண்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல் செய்துள்ள பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரான தாரணிக்கு மின்சார பைக்கை வாங்க செலுத்திய தொகை ரூ 80,000/- ஜி. பிரசாந்த்க்கு மின்சார பைக்கை வாங்க செலுத்திய தொகை ரூ 84,000/- மற்றும் ஜி. எஸ். கோகுல்ராஜ்க்கு மின்சார பைக்கை வாங்க செலுத்திய தொகை ரூ 89,000/- ஆகியவற்றை வழங்கவும் ஒவ்வொருவருக்கும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தையும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் பத்தாயிரத்தையும் வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு தாக்கல் செய்துள்ள பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரான என். ராமநாதனுக்கு மின்சார பைக்கை வாங்க செலுத்திய தொகை ரூ 87,000/- மற்றும் ஜி. பி பிரபாகரனுக்கு மின்சார பைக்கை வாங்க செலுத்திய தொகை ரூ 84,000/- ஆகியவற்றை வழங்கவும் ஒவ்வொருவருக்கும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சத்தையும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் பத்தாயிரத்தையும் வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு தாக்கல் செய்துள்ள பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரான சுமதிக்கு மின்சார பைக்கை வாங்க செலுத்திய தொகை ரூ 87,000/- மற்றும் கமலாவிற்கு மின்சார பைக்கை வாங்க செலுத்திய தொகை ரூ 84,000/- ஆகியவற்றை வழங்கவும் ஒவ்வொருவருக்கும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஐம்பதாயிரத்தையும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் பத்தாயிரத்தையும் வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.