ராசிபுரம் நகராட்சி தற்போது முதல் நிலை அந்தஸ்து பெற்ற நகராட்சியாக இருந்து வருகிறது. இதனை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தும் வகையில் அரசுக்கு நகராட்சி மண்டல அலுவலகத்தால் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
ராசிபுரம் நகராட்சி 27 வார்டுகளுடன், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50244 மக்கள் தொகை கொண்டுள்ளது. தற்போது நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 22.05.1998-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்தப்பட்ட இந்நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்காக நகரின் அருகாமையில் உள்ள 6 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ப.அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பியுள்ள கருத்துருவில், ராசிபுரம் நகராட்சியுடன் அருகில் உள்ள முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், சந்திரசேகரபுரம்,முருங்கப்பட்டி, கோனேரிப்பட்டி 6 ஊராட்சிகளை இணைக்கலாம். இந்த ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைப்பதன் மூலம் மக்கள் தொகை 64144 இருக்கும். இதனை நகராட்சியுடன் இணைப்பதன் மூலம் தேர்வு நிலை நகராட்சி அந்தஸ்து பெற்றால், அப்பகுதிக்கு அரசின் மான்யம் கிடைக்கப்பெற்று அந்த ஊராட்சிகள் மேம்பட்டு மக்கள் வாழ்வாதாரம் உயரும் என அக்.4-ல் அரசுக்கு அனுப்பியுள்ள கருத்துருவில் குறிப்பிடப்பட்டுள்ளது.