நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக முதலமைச்சருக்கு புகார் அனுப்பிய பாமக பிரமுகருக்கு லாட்டரி விற்பனையாளர்கள் மிரட்டல் விடுத்து தாக்க முயன்றதாக ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் மறைமுகமாக அதிக அளவு விற்பனை நடந்து வருகிறது. லாட்டரி சீட்டுகள் முழுமையாக இல்லாமல், நெம்பர் அடிப்படையில் விற்கப்படுகிறது. இதனை அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் பலரும், சிறிய வியாபாரிகளும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் வாங்கி நெம்பர் குறித்துச் செல்வதை பல இடங்களில் கண்கூட பார்க்க முடிகிறது. இதில் ஏமாந்து லாட்டரி சீட்டு நெம்பர்களை வாங்கி அன்றாட கூலித்தொழிலாளர்கள் பலர் தங்களது உழைப்பை இழந்து வருகின்றனர் என்பது நிதர்சனம். இந்த லாட்டரி சீட்டு விற்பனை காவல்துறை, அரசு நிர்வாகத்துக்கு தெரியாமல் விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
முதலமைச்சருக்கு புகார்:
ராசிபுரம் பகுதியில் அதிக அளவில் இது நடந்து வருவதாக பாமக செயற்குழு உறுப்பினர் ஆ.மோகன்ராஜ் தமிழக முதலமைச்சர் தனி பிரிவுக்கு புகார் அளித்திருந்தார். ராசிபுரம் நகரில் நகர்மன்ற உறுப்பினர் இதனை விற்பனை செய்வதாக புகாரில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பாமக பிரமுகருக்கு நகர்மன்ற உறுப்பினர் மிரட்டல் விடுத்து தாக்கவும் முயற்சி செய்தாராம். இதனையடுத்து பாமக நிர்வாகி ஆ.மோகன்ராஜூ ராசிபுரம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் தன்னை தரக்குறைவாகப் பேசி, மிரட்டல் விடுத்து தாக்கவும் முயன்றி லாட்டரி விற்பனை செய்து வரும் நகர்மன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்க வில்லையெனில் நகரில் அக்.8-ம் தேதி புதிய பஸ் நிலையம் முன்பு பாமக சார்பில் ஆர்பாட்டம் நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்.