ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் வகையில் லாரிகள் நிறுத்தப்படுவதை போக்குவரத்து காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் சேலம்-நாமக்கல் இடையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரதான பகுதியாகும். இப்பகுதியில் சாலையோரம் அதிக உணவகங்கள், தாபாக்கள், டயர் பஞ்சர் கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளதால், அவ்வழியே செல்லும் லாரிகள் அதிக அளவு சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக சேலத்தில் இருந்து வரும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகள் ஆண்டகளூர்கேட் மேம்பாலத்தின் கீழ் செயல்படும் தாபாக்கள் ஒரம் இடதுபுறம் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நுழையும் பிற வாகனங்களுக்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இப்பகுதியை கடக்கும் வாகனங்களுக்கு அதிக விபத்து ஆபத்து உள்ளது.
இதனால் பாலத்தின் கீழ் உள்ள ராசிபுரம் செல்லும் சாலையில் நுழையும் பஸ், கார் போன்ற வாகனங்கள் அதிக சிரமத்தை சந்திக்கின்றனர். ராசிபுரம் செல்லும் சர்வீஸ் சாலை எது என தெரியாத வகையில் சாலையை மறித்து லாரிகள் இரவு நேரங்களில் அதிக அளவு நிறுத்தப்படுகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீஸார் இதனை கண்காணித்து இரவு நேரங்களில் தாபாக்கள் ஒரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இதனை தடுக்க தாபா , உணவக உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்கின்றனர் வாகன ஒட்டிகள்.