நாமக்கல் புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள வாடகை அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளைய்யன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நாமக்கல் புதிய பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் நாமக்கல் மாநகராட்சியில் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலம் நியாயமான முறையில் நடைபெற்றாலும், கடைகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகை மிக அதிகமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த வணிகர்கள் பலர் ஏலம் கேட்க தயங்கி விலகிக் கொண்டனர். பேருந்து நிலைய கடைகள் என்பது சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரம். இதில் வசதி படைத்தோரும், ஆர்வம் மிகுதியில் புதியவர்களும் போட்டிபோட்டு அதிக வாடகைக்கு ஏலம் கேட்டதால் சிறு வணிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆரம்பத்தில் 3 முறை ஏல அறிவிப்பு வெளியிட்ட போது வைப்பு தொகை ஒரு கடைக்கு 2 லட்சமாக இருந்தது. 4வது முறை ஏல அறிவிப்பு வெளியிடும் போது வைப்பு தொகை 4 லட்சமாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற ஏலத்திலும் மாத வாடகை சேவை வரி 18 சதம் நீங்கலாக ரூபாய் 15ஆயிரம், 20 ஆயிரம் என இரு பிரிவுகளில் அரசு நிர்ணயம் செய்தது. இது சாமானிய வணிகர்களால் கட்ட இயலாத வாடகை. எனவே வணிகர்கள் பலர் ஏலம் கேட்க ஆர்வமின்றி வெளியேறினர்.
தமிழகத்தில் வாடகை நிலவை அதிகமின்றி சிறப்பான முறையில் வாடகை வசூல் செய்யும் மாநகராட்சியாக நாமக்கல் திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் நகராட்சி கடைகளுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நியாயமான வாடகை ஆகும். ஆனால் திருச்செங்கோடு பேருந்து நிலைய கடைகளுக்கு மிக அதிகமான வாடகை நிர்ணயிக்கப்பட்ட காரணத்தினால் வாடகை செலுத்த முடியாமல் வணிகர்கள் திணறிவருகின்றனர்.
தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்ட கடைகளை எடுத்த வணிகர்கள் வாடகை செலுத்த இயலாமல் கடைகளை திரும்ப ஒப்படைத்த காரணத்தால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவற்றை அரசு கவனத்தில் கொண்டு நியாயமான வாடகையை நிர்ணயம் செய்தால் வணிகர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதோடு, அரசுக்கு வருவாயும் கிட்டும். உள்ளாட்சி கடைகளுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழக அரசு வழிகாட்டுதல் குழு ஒன்றினை உருவாக்கி அதில் வணிகர்கள் சார்பில் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் ஆகியோரை இடம் பெற செய்தது. இவர்களின் மூலமாகவும் உள்ளாட்சி கடை பிரச்சனைகள் நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதே போல இந்த வாடகை நிர்ணயம் மற்றும் வாடகை குறைப்பு தொடர்பாக அரசு பரிசீலனை செய்து நல்ல முடிவினை அறிவிக்க வேண்டும் என்பது வணிகர்களின் கோரிக்கை.