ஆசிரியர்கள் தான் நல்ல சமுதாயத்தை கட்டமைக்கும் வல்லமை படைத்தவர்கள் – ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளி தாளாளர் எம்.எஸ்.உதயகுமார்
நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் செயல்பட்டு வரும் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளி, ரோட்டரி கிளப் ஆப் நாமக்கல் எஜூகேஷனல் சிட்டி ஆகியன ஆசிரியர் தினத்தை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசான் விருது-2024 வழங்கி கௌரவித்துள்ளது. நாமக்கல் எர்ணாபுரத்தில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.எம்.உதயகுமார் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் முன்னதாக பேசியது:
“ஆசிரியர்கள் நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும்” என்ற கனவோடு இருந்த சிறந்த கல்வியாளர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை இந்த நாளில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும். இந்த விருதின் மூலம் அங்கீகாரத்தைப் பெற பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்கள் தான் சமுதாயத்தை கட்டியெழுப்புபவர்கள் என்பதை உணர வேண்டும். மாணவர்கள் பாடங்களில் சிறந்த முறையில் கற்று தேர்ச்சி பெறும்போதுதான் நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.
என் மாணவப் பருவத்திலேயே எனக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையை அளித்து, அறிவியலில் ஆர்வத்தை உருவாக்கி, ஒழுக்கக் கல்விக்கான விதைகளை விதைத்த எனது ஆசிரியர்களைப் பற்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு நல்ல மாணவன் திறமையான ஆசிரியரிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள முடியும். “வாழ்க்கையில் வெற்றி பெறவும், இலக்கை அடையவும், ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகிய மூன்று வலிமையான சக்திகளைப் புரிந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டும்.” என்றார்.
இவ்விழாவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் முதல்வர் டாக்டர் எம். செல்வராஜீ, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் மா. கோவிந்தராசு, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பி.பிரியா, ஒய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் மு.ஆ.உதயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 150-க்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு ஆசான் விருதுகள்-2024 வழங்கிப் பேசினர்.
மாவட்ட ரோட்டரி பப்ளிக் இமேஜ் சேர்மேன் ஆர்.திருமூர்த்தி (எ) ரவி, ரோட்டரி கிளப் ஆப் நாமக்கல் எஜூகேசனல் சிட்டி நிர்வாகிகள், பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்