நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மோகனூரில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.நேச்சுரல் ஃபைபர் யூனிட் எனும் நிறுவனம் வாழை நாரிலிருந்து தரமான பல்வேறு கைவினை பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் இதுவரை 100க்கும் அதிகமான பெண்களுக்கு நேரடி பயிற்சி அளித்தும், 25 பெண்களுக்கு இதே நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பினையும் வழங்கியுள்ளது.
சுயதொழில் செய்து தொழில் துறையில் சாதிக்க முனையும் பெண்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுகந்தியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது பெரும் சவாலாக இருப்பதாக நிறுவன உரிமையாளர் சுகந்தி இச்சந்திப்பின் போது நிர்வாகிகளிடம் தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஒரு அங்கமான இளம் தொழில் முனைவோர் அமைப்பு இம்மாதியான தொழில் முனைவோருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், தரமான தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், உள்நாட்டில் சந்தைப்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் பேரமைப்பின் மாவட்ட தலைவர் த.ஜெயகுமார் வெள்ளையன் சந்திப்பின் போது அவர்களிடம் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், இணை அமைப்பாளர்கள் எவரெஸ்ட் ராஜா, மார்க்கெட் சிவக்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன், நாமகிரிப்பேட்டை அனைத்து வணிகர் சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.