நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையத்தை மாற்றும் நகராட்சியின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலைய மீட்பு கூட்டமைப்பினர் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு சென்னையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
இக்கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திமுக நாமக்கல் மாவட்ட அவைத்தலைவர் நா.ஜோதிபாசு, அதிமுக நகர செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் இதில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் தலைவர்களை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கி கூறி ஆதரவு கேட்டு மனு அளித்தனர்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், எஸ் டி பி ஐ., கட்சியின் நிர்வாகிகள், தமிழ்நாடு வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஆகியோரையும் நேரில் சந்தித்தனர்.
அப்போது, ராசிபுரம் நகர மையப்பகுதியில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தை தொலைவில் உள்ள நகரத்திற்கு தொடர்பே இல்லாத அணைப்பாளையம் பகுதியில் மாற்றுவதை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். அதற்குண்டான ஆவணங்களையும், கூட்ட அமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்தும் குறிப்பிட்ட மனுவை வழங்கினர்.
இந்த சந்திப்பில், நாமக்கல் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் v. சேதுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் S.மணிமாறன், பாமக கிழக்கு மாவட்ட துணை தலைவர் கே.கந்தசாமி, பூக்கடை கி. மாது, மாவட்ட வன்னியர் சங்க துணைச் செயலாளர் லோ.நந்தகுமார், Y. நாசர், நகரச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ., நாசர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.