நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் செண்டே மேளதாளத்துடன் தங்கை மகளுக்கு தாய்மாமன் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்கள் உறவினர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் -பிருந்தா தம்பதியினர். இவர்களது மகள் திவிஷா பூப்பெய்தியதையடுத்து பட்டணம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்களை அழைத்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இதில் பிருந்தாவின் அண்ணனும், திவிஷாவின் தாய் மாமனுமான மகேஸ்வரன் சீர்வரிசை வழங்கும் முறை உள்ள நிலையில் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மகேஸ்வரன் -ஆனந்தி தம்பதியினர் தடபுடலாக சீர்வரிசைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சீர்வரிசியானது வடுகம் பனங்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டணம் திருமண மண்டபத்திற்கு 7 மாட்டு வண்டிகளில் 200க்கும் மேற்பட்ட தாம்பூல தட்டுகளில் வாழைப்பழம், அண்ணாச்சி, ஆப்பிள், இனிப்பு, காரம், சாக்லேட், கேக், பாரம்பரிய தின்பண்டங்கள் என ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு பொருட்களை வைத்து கொண்டவரப்பட்டன. மேலும் பட்டு பாவாடை, 6 பவுன் தங்க நகை, 2 காங்கேயம் நாட்டு மாடு , இரண்டு ஆட்டு கிடா என அனைத்தையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கேரள செண்டை மேளதாளத்துடன் தடபுடல் ஏற்பாடுகளுடன் ஊர்வலமாக வந்தனர். 200 சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தட்டுகள், கால் நடைகள் போன்றவை 7 மாட்டு வண்டிகளில், மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்டது.
மேளதாளத்துடன் வந்த மகேஸ்வரன் குடும்பத்தினரை உறவினர்கள் வண்ண வண்ண பொருட்கள் தூவி வரவேற்று அழைத்துச்சென்றனர். பின்னர் திவிஷாக்கு மஞ்சள் நீராட்டு விழாவானது நடைபெற்றது. மேலும் தனியார் திருமண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், நடனங்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சியும் சிறப்பாக ஏற்பாடு செய்து உறவினர்களை அசத்தினர். அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தங்கை மகளுக்கு தமிழரின் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய தாய் மாமன் மற்றும் சீர்வரிசை பொருட்களை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் மண்டபத்திற்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றனர்.