ராசிபுரம் பஸ் நிலையம் இடமாற்றம் தொடர்பாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆய்வு பணிக்காக ராசிபுரம் வந்த நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை ஆணையரிடம் பல்வேறு அமைப்பினர் பஸ் நிலையம் மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.
ராசிபுரம் பஸ் நிலையத்தை நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் நகராட்சி ஈடுபட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகரில் கடையடைப்பு, மனித சங்கிலி, உண்ணாவிரதம், மனு கொடுக்கும் போராட்டம் என பல போராட்டங்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக இணை ஆணையம் சந்திரசேகரன் ஆய்வு பணிக்காக ராசிபுரம் வருகை தந்தார். ராசிபுரம் பஸ் நிலையத்தை பார்வையிட்ட அவர் நகராட்சி அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து ராசிபுரம் மக்கள் நலக்குழுவின் நிர்வாகிகள் நல்வினைச் செல்வன், வி.பாலு உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து பஸ் நிலையத்தை மாற்றக்கூடாது எனக்கோரி அவரிடம் மனு அளித்தனர். இதே போல் பஸ் நிலைய மீட்பு குழு கூட்டமைப்பு சார்பில் நகராட்சி அலுவலகத்தில் இணை ஆணையரை நேரில் சந்தித்து பேருந்து நிலையம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இதனையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட அவர், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவே ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்குமாறு பதிலளித்ததாக தெரிகிறது.