நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் மேற்கு பார்த்தவாறு அமைந்துள்ள ஸ்ரீஅறம்வளர் நாயகி உடனமர் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கான பாலாலயம் நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆக.22-ல்) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
கொல்லி்மலை பகுதியை நடுநாயகமாகக் கொண்டு ஆட்சி புரிந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஒரி மன்னரால் கட்டப்பட்டது இக்கோவில். ஏற்கனவே இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்தி 24 ஆண்டுகள் ஆனநிலையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையிடம் கும்பாபிஷேகத் திருப்பணிகள் தொடங்கிட அனுமதி கேட்கப்பட்டது. தற்போது கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட ஆலயத்தின் திருப்பணிகள் தொடங்கிட அரசு அனுமதியளித்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் உபயதாரர்களின் ஒத்துழைப்போடு பல லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதனையடுத்து அறம்வளர்நாயகி உடனமர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பாலாலய பூஜைகள் யாகசாலை பூஜையுடன் தொடங்கி ஆக.22-ல் காலை 7 மணி முதல் 9 மணி வரை ராஜகோபுரம் உள்ளிட்ட கோவில் கோபுரத்திற்கு பாலாலயம் நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து முன்னதாக ஆக.21-ல் (புதன்கிழமை) மாலை கோவிலில் தொடக்க பூஜைகள் நடத்தப்படுகின்றன. இக்கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் செ.சவிதா உள்ளிட்ட கோவில் அர்ச்சகர்கள், சிவனடியார் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் பாலாலயத்துடன் தொடக்கம்
RELATED ARTICLES