ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பெளர்ணமியை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.
இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும். ஆவணி பௌர்ணமி தினத்தையடுத்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சள், சிவப்பு கயிறுகளால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் கோவிலை சுற்றி அழைத்து வரப்பட்டார். ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.