நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் 21-ம் ஆண்டு 63 நாயன்மார்களுக்கு பெருவிழா தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் 63 நாயன்மார்களுக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா ஆக.10-ல் தொடங்கி 12 வரை மூன்று நாட்கள் நடந்தது.
இதனையடுத்து முதல்நாள் நடந்த விழாவில், நாயன்மார்களுக்கு பால், தயிர், தேன், கரும்பு சாறு, திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இதனை கோவில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். மேலும் விநாயகர், முருகர், நந்தியம் பெருமான் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவுகள், பரதம் போன்ற கலைவிழாக்கள் திருமுறை ஒதுதல் போன்றவை நடைபெற்றன. இதில் திரளான சிவபக்தர்கள் பங்கேற்றனர். 2-ம் நாள் விழாவில் பரதநாட்டி நிகழ்ச்சிகளும் , அன்னதானம் நடந்தது. 3-ம் நாள் நிகழ்வில் 63 நாயன்மார்கள் நகரில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா அழைத்து வரப்பட்டனர். இதில் ஏராளமான சிவ தொண்டர்கள் பங்கேற்று வாணவேடிக்கையுடன் கைலாய மேளம் , வாத்தியங்கள் முழங்க 63 நாயன்மார்கள் உள்ளிட்ட, அறம் வளர் நாயகி உடனமர் கைலாயநாதர் உள்ளிட்ட சுவாமிகள் ஊர்வலம் அழைத்து வரப்பட்டனர்.