ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி கிராம விவசாயி சுரேஷ் என்பவர் மரவள்ளி பயிர் சாகுபடியில் மாவுப்பூச்சி தாக்குதல் இல்லா சாகுபடி முறையை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசின் கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனம் முற்போக்கு கிழங்கு பயிர் விவசாயி விருது வழங்கி கெளரவித்துள்ளது. இதனை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வழங்கி கெளரவித்துள்ளார்.
ராசிபுரம் அருகேயுள்ள கூனவேம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மத்திய கிழங்கு
ஆராயச்சி நிறுவனத்தால் வெளீயிடு செய்யப்பட்ட ஸ்ரீரெக்சா, ஸ்ரீஅதுல்யா, ஸ்ரீகாவேரி, ஸ்ரீஜெயா, ஸ்ரீவிஜயா ஆகிய 5 வகையான மரவள்ளி கிழங்கு பயிர்களை
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சாகுபடி செய்து வருகிறார். புதிய ரகங்கள் அறிமுகத்துக்குப் பின் அதன் வளர்ச்சி குறித்த ஆய்வினை நிறுவன விஞ்ஞானிகளாலும், சாகுபடி தொழில்நுட்பங்கள் வட்டார தோட்டக்கலை துறையாலும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 27.10.2023 அன்று வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்கள் பைஜு, ரா.முத்துராஜ் து. ஜெகநாதன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மரவள்ளி பயிர் தொழில் நுட்ப வல்லுநர்களும் கலந்து கொண்டு மரவள்ளி பயிர் புதிய ரகத்தின் சாகுபடி தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தனர்.
தமிழகத்தில் பயிரிடப்படும் தாய்லாந்து உள்ளிட்ட மரவள்ளி ரகங்களில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகம் உள்ள நிலையில், மகசூல் குறைந்து காணப்படும். இதனால் ஏக்கருக்கு 12 டன் அளவிற்கே மகசூல் எடுக்க இயலும். ஆனால் மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி வெளியீடான ஸ்ரீரெக்சா ரகம் எந்த பூச்சி தாக்குதலுக்கும் உள்ளாகாமல் ஏக்கருக்கு 22.5 டன் அளவிற்கு மகசூல் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் விவசாயி சுரேஷ்.
விவசாயிக்கு கேரள ஆளுநர் விருது: மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடான கிழங்கு பயிர்களை பூச்சி தாக்குதல் ஏதுமின்றி சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்த ராசிபுரம் கூனவேலம்பட்டி விவசாயி சுரேஷ்-யை பாராட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற 61வது நிறுவன தினத்தில் விருதும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. முற்போக்கு கிழங்கு பயிர் விவசாயி என்ற விருதினை விழாவில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்று விவசாயிக்கு வழங்கி கெளரவித்து பாராட்டினார்.
மேலும் மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் விதைக்கரணை உற்பத்தி மற்றும் விற்பனை உரிமம் விவசாயி சுரேஷ்க்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவன மரவள்ளி விதைக்கரணைகளை நாமக்கல், தஞ்சாவூர், ஈரோடு, சேலம், ஆகிய மாவட்டங்களைச் சேரந்த சுமார் 25 விவசாயிகளுக்கு முன்பதிவின் அடிப்படையில் சுரேஷ் வழங்கியுள்ளார். மேலும் வருகிற ஆகஸ்டு மாதம் விருது பெற்ற சுரேஷ் வயலில் மரவள்ளி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான வயல் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ராசிபுரம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மா.யோகநாாயகி தெரிவித்துள்ளார்.