நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் பயன்பாடு, போதைப்பொருள் விற்பனை, நேரம் கடந்து மதுபான பாட்டில் விற்பனை போன்றவை குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் தகவல் கொடுக்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சாராய சாவு சம்பவத்தையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் குறித்து தீவிர கண்காணிப்புகள் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ச.உமா அறிவுறுத்தல் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தார். ராசிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன் கள்ளத்தனமாக விற்கப்படும் போதை பொருள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுப்பது குறித்து அறிவுரை வழங்கிப் பேசினார். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் விழிப்புடன் இருந்து கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்காணித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் சட்டவிரோதமான கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சட்ட விரோத மதுபானம் வைத்திருத்தல், விற்பனை செய்தல் குறித்து தகவலை உயர் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். பெரிய அளவிலான முறைகேடாக கள்ளச்சாராயம் காய்ச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை கையாளுவதில் அலட்சியமாக இருந்தால் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கள்ளச்சாராயம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போதை மருந்துகள், அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து நடைபெறும் மது விற்பனை சம்மந்தமாக தகவல் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்: 88383 52334 எண்ணிற்கும் 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவி குழுக்கள், ஊராட்சி தலைவர், கிராம சுகாதார செவிலியர், பள்ளி ஆசிரியர், அஞ்சலக ஊழியர்கள், பொது விநியோகத்திட்ட பணியாளர் சேர்ந்து பொதுமக்களுக்கு போதை பொருள் பாதிப்பு குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு பதாகைகள், பொதுமக்கள் பார்வையில்படும்படி அனைத்து நியாயவிலை கடைகள், பள்ளிக்கூடம், அனைத்து அரசு அலுவலகங்கள், வாரச்சந்தைகளில் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடனடியாக நிறுவிட வேண்டும் என நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், திருச்செங்கோடு வட்டாட்சியர் சுகந்தி உட்பட காவல்துறை, வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.