ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து டிவிஎஸ் சாலை, பட்டணம் சாலை, சிவானந்தா சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதை மாற்றியமைத்து அண்ணாசாலை, கச்சேரி வீதி வழியாக பேருந்துகள் செல்லும் பழைய வழித்தடத்தில் மாற்றியமைக்க வேண்டும் என தனியார் பேருந்து ஒட்டுநர்கள், எம்பி., டிஎஸ்பி-யிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு போன்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் அண்ணாசாலை, கச்சேரி வீதி, பழைய நீதிமன்றம் வழியாக செல்லும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நகருக்குள் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் டிவிஎஸ்.,சாலை, வீட்டு வசதி வாரிய காலனி, சிவானந்தா சாலை வழியாக செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த வழித்தட மாற்றம் பேருந்து ஒட்டுநர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல், வேகமாக இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. மேலும் பேருந்துகளின் ஒட்டுநர்களுக்கு இடையே நேரம் தொடர்பாகவும் பலமுறை வாய்தகராறுகளும் ஏற்படுகிறது. எனவே பழைய வழித்தடத்தின் படி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரம் தனியார் பேருந்து ஒட்டுநர்கள், நடத்துநர்கள் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்தனர்.