Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: ராசிபுரம் ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை: ராசிபுரம் ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குறிப்பிட்டார். கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும், அரசைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் ராசிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தார். நகர அதிமுக செயலர் எம்.பாலசுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார். அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வெ. சரோஜா முன்னிலை வகித்தார்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசியது: திமுக அரசு நிர்வாக திறமையின்றி முடங்கிப்போய் உள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக வினரின் ஆதரவோடு கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியினரின் உதவியோடுதான் இந்த போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் ஆளும் திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே காட்டுகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கஞ்சா பல்வேறு இடங்களில் விற்பனை நடைபெறுகிறது. இதனை திமுக அரசால் தடுக்க முடியவில்லை. எனவே இது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, தமிழகத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லாமல் இருந்தாலே காவல்துறையினர் சுகந்திரமாக செயல்பட்டு போலி மதுபானம், கள்ள சாராயம், கஞ்சா, போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும். பலமுறை காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகாலம் கள்ள சாராயம் இறப்புகள் இல்லை. அதிமுக அரசு அதனை முழுமையாக தடுத்தது. ஆனால் தற்போது, ஆளும் திமுக கட்சியினர் பின்னணியில் உள்ளதால்தான் தமிழகத்தில் கள்ள சாராயத்தை தடுக்க முடியவில்லை.

தமிழகத்தில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் தான் மக்கள் கள்ள சாராயத்தை வாங்கி அருந்துகின்றனர். அரசு வருமானத்தை பார்க்காமல் மக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். பூரண மதுவிலக்கு என்பது அதிமுகவின் கொள்கை ஆகும். கடந்த அதிமுக ஆட்சியில் மதுபான கடைகள் படிக்கப்படியாக குறைக்கபட்டன.
ஆனால் திமுக அரசு கடைகளை மூடாமல் கடைகளுக்கு அதிகமாக அனுமதி அளிக்கிறது. கடந்த முறை கள்ள சாராயம் சாப்பிட்டு மரணங்கள் ஏற்பட்ட பொழுது சிபிசிஐடி விசாரணை போடப்பட்டு அது அப்படியே உள்ளது. அதன் காரணமாக தான், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறோம் என்றும் முன்னாள் அமைச்சர் பி தங்கமணி செய்தியாளரிடம் பேசினார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பரமத்திவேலூர் எம்எல்ஏ.,சேகர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், பொன். சரஸ்வதி, நாமக்கல் மாவட்ட , நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டு, கள்ளக்குறிச்சி சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு திமுக அரசு முழு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் ஆளுங்கட்சிணரின் ஆதரவோடு கள்ள சாராயம், போதை பொருட்கள் போன்ற உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!