நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து, இவ்விழாவில் பங்கேற்று அவருக்கு, கிரீடம், செங்கோல், மாலை ஆகியவற்றை, பாஜக சார்பில் அணிவித்து வழங்குவதற்கு, அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. ராமலிங்கம் ஏற்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, அப்பொருட்களை, நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலுக்கு கொண்டு வந்து, அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பதவியேற்பு விழாவுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான Dr. K.P. ராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் M. ராஜேஷ்குமார், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர், காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
முன்னதாக, கோவிலைச் சுற்றி கொண்டு வரப்பெற்ற கிரீடம், செங்கோல், மாலை ஆகியவற்றுக்கு காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவிலின் மூலவர் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பாஜக நாமக்கல் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோவில் வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. ராமலிங்கம், பாரத பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்க உள்ள, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவருக்கு மயிலிறகால் ஆன கிரீடம், செங்கோல், மாலை ஆகியவற்றை நேரில் அணிவித்து வழங்குவதற்காக, கொண்டு செல்ல உள்ளோம். காளிப்பட்டி கந்தசாமியின் அருள் பிரதமருக்கு என்றைக்கும் இருந்து, இந்த தேசத்தை பாதுகாப்பாக வழி நடத்திட வேண்டும் என்று வழிபாடு செய்தோம். சுவாமியின் அருள்பெற்று, கிரீடம், செங்கோல், மாலை ஆகியவற்றை பிரதமரின் பதவி ஏற்பு விழா நாளில், பாஜகவின் சார்பில் நேரில் அணிவித்து அவருக்கு வழங்க உள்ளோம்.
3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை கொடுத்து செயல்படுவார். எதிர்பார்த்த வளர்ச்சியை விரைவில் எட்டும் வகையில் செயல்படுவார். நாட்டின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் ஆற்றலோடு பிரதமராக பொறுப்பேற்கிறார்.
2024 பாராளுமன்ற தேர்தல் களத்தில் 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவோம் என்று கூறியிருந்தோம். அதிலே கொஞ்சம் குறைவாக இருக்கின்ற காரணத்தால், எந்த விதமான சஞ்சலமும் இன்றி அதே பொலிவோடும் உறுதியோடும்,, தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்களாக பாவித்து இந்த தேசத்தை தொடர்ந்து வழிநடத்தி, ஆற்றல்மிக்க பிரதமராக தொடர்வார். தேசத்தின் பாதுகாப்பிற்கும் எந்த விதமான அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பார். அதுமட்டுமின்றி தேசத்தை வழிநடத்துவதில், அவருக்கு இணையான இனியொரு பிரதமர் இந்த உலகத்திலே இல்லை என்று சொல்லத் வகையில், அடுத்த 5 ஆண்டு காலத்தில் மிக அற்புதமான ஆட்சி அமைய உள்ளது என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான Dr. K.P. ராமலிங்கம் காளிப்பட்டியில் தெரிவித்தார்.