ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதிக்கும் நடைபெற்றது. இக் கோயிலின் ஆண்டு திருவிழா மே 13-ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மே 16-ல் கம்பம் நடுதல் ,மே 20-ல் பூவோடு பற்றவைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை அம்மை அழைத்தல், சிறப்பு அபிஷேகங்கள், இன்னிசை பட்டி மன்றம் நடைபெற்றன. பின்னர் புதன் கிழமை சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், அக்னி குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பூங்கரகம், அக்கினிசட்டி ஏந்திய பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு,அபிஷேகம் செய்து தீபாரதனை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவில் பூசாரி பக்தர்களை சாட்டையால் அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் பூசாரியிடம் சாட்டை அடி வாங்கினால் பில்லி சூனியம் நீங்கும், கஷ்டம் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வி செல்வம் கைக்கூடும் என்று நம்புவதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூசாரியிடம் சாட்டையடி பெற்றனர்.